Thursday, September 30, 2010

ஆன்மீக கேள்வி பதில் -2



நைட் ஷிப்ட் பணியாளர்கள் காயகல்பம், உடற்பயிற்சி, தவம் இவற்றையெல்லாம் எவ்வாறு செய்து வருவது?

1. தவம், தற்சோதனை இவைகளை, மனம் எப்பொழுதெல்லாம் நடு மனத்திலிருந்து [7-14] புற மனதுக்கு [14-40] நகர்கின்றதோ அப்பொழுது செய்வதே நல்லது. மனம் அமைதியிலிருந்து இயக்கத்துக்கு வரும் போது, அலையியக்கம் சற்றே குறைவாய் இருக்கும். இந்த நேரமே சிறந்த நேரம். [அதாவது தூங்கி எழுந்தவுடன் செய்வது நல்லது]

2. காயகல்பம், நேரம் சார்ந்த பயிற்சி என்று சொல்லி விட இயலாது. ஆனால், நேர இடைவெளி சார்ந்த ஒன்று. எனவே உணவு நேரம் சார்ந்த, காயகல்ப நேர இடைவெளியை மட்டும் மதித்து வந்தால் போதுமானது. காயகல்பம் உடலின் செரிமானத்தை பாதிக்க வல்ல ஒன்று, நேரத்தில் முறை தவறினால். இதையும் நினைவில் கொள்க. மேலும் சரியான நேரத்தில் உணவு உண்ணாது போனால், ஐந்தில் முறை தவறியதாய் போய்விடும்.

3. நமது உடற்பயிற்சி உடல்-மனம் இணைந்த ஓர் பயிற்சி. உடல் சார்ந்த பயிற்சி என்பதால், உணவு செரித்தல் நேரம் சார்ந்து செய்ய வேண்டும். மனம் சார்ந்த பயிற்சி என்பதால், எப்பொழுதெல்லாம் மனம் நடு மனத்திலிருந்து [7-14] புற மனதுக்கு [14-40] நகர்கின்றதோ அப்பொழுது செய்வதே நல்லது. [அதாவது தூங்கி எழுந்தவுடன்].

நமது பயிற்சி முயற்சிகள் கர்ம யோக நிலைக்கு ஒரு போதும் ஊறு விளைவிக்காது. விளைவிக்கா வண்ணம் பயிற்சி முயற்சிகளி ஈடுபட்டு நல்வாழ்வு வாழ்க!

இரவில் வேலைக்குச் செல்லுதலை தவிர்த்து விடலாமா? [அதனால் பல உடற்சிக்கல்கள் தோன்றுவது போல் உள்ளது]

என்று ஓரறிவுடைய சிறு தாவரம், தான் வாழ சூரிய ஒளியை ஆதாரமாய்க் கொண்டதோ, அன்றே சூரியன் சார்ந்த வாழ்க்கை முறை இப்புவியில் ஓர் ஆதாரமாகி விட்டது. ஆறு அறிவு வரை அந்த தாவரம் பயணித்து வந்து, இன்று மனிதனாய் நின்று, இயற்கையை தன்னிஷ்டம் போல் வளைக்க முயல்கின்றது.

இரவில் அளவு முறை உறக்கம், பகலில் அளவு முறை உழைப்பு என்று வாழ்தல், இயற்கையோடு இணக்கமாகும் அடிப்படை வழி.

பரிணாமம், இயல்பூக்கம், செயல் விளைவு எனும் இயற்கைச் செயல் முறைகளை நாம் இங்கே குறிப்பிடுவது மிக அவசியமாகின்றது. பெரும்பாலான விலங்குகள், நான்கு கால்களைக் கொண்டு நடந்து தம் இயற்கைத் தேவைகளான உணவு, உறைவிடம், இனப்பெருக்கம் செய்கையிலே, பரிணாமத் தொடரிலே குரங்கு எனும் நமது மூதாதையர் வருகின்றார். அவருக்கு உணவு மரத்தின் மேலே, உறைவிடத்துக்குக் கூட மரக் கிளை பாதுகாப்பானதொன்று [சிங்கம், புலி போன்ற விலங்குண்ணும் உயிரினங்களிடமிருந்து பாதுகாப்பு]. இந்த அடிப்படைத் தேவைகள் தந்த மன உந்துதலாலே, மரமேர முயற்சி செய்து செய்து, இறுதியாய் வெற்றியும் கண்டு, மரமேறுதல் அதன் பழக்கமாய்ப் போகின்றது. இந்த பழக்கம், முன்னிரு கால்களை அடிக்கடி மேலே உயர்த்த வைக்கின்றது. குரங்கின் பரிணாமத் தொடரிலே, எதோ ஒரு வம்சத்திலே, ஒரு குட்டி, கால்கள் மேல் எழும்பிய நிலையில் பிறந்து விட, முன்னிரு கால்கள் கைகளாய் மாறுதலில் வந்து நிற்கின்றது. அதாவது தன், முன்னிரு கால்களை, அடிக்கடி, மேலுயர்த்தும் பழக்கம் கருமையத்தில் பதிவாகி, சூழ் நிலைக் காரணிகளைச் சார்ந்து, எதோ ஒரு சந்ததியில் அப்பழக்கப் பதிவு, உடலினில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இதே போன்று தான், கரப்பான் எனும் பூச்சி, தன் உணவை இரவில் மற்ற உயிரிகள் நடமாடா நிலையில் ஈட்டி ஈட்டிப் பழக, அப்பழக்கப் பதிவே, பின்னாளில், இரவுப்பழக்கமுடைய பூச்சியாய் அதை மாற்றிவிடுகின்றது. பரிணாமம் என்பது, இயற்கைத் தேவைகளைச் சார்ந்தே அமைகின்றது.

இவ்வாறாக பரிணாமத் தொடரில், சீராக பயணித்து வருகையில், ஒரு உயிரியின் சீவகாந்தக் களம், தன்னில் திடீர் மாற்றங்களையும் காண்பதுண்டு. அதனுடைய ஏதோ ஒரு குறிப்பிட்ட இயல்பு திடீரென ஊக்கம் பெற்றுவிடும், காந்தக் களத்தில் விளைந்த திடீர்த் தர மாற்றத்தால். இது இயல்பூக்கம். எடுத்துக்காட்டாக, பிளத்தல் [asexual reproduction] எனும் பழக்கம் பரிணாமத் தொடரின் இயல்பு, இந்த இயல்பு ஏதோ ஒரு காரணியால் ஊக்கமடைந்து, கருவிலே ஒரு கரு இரண்டாய் பிளந்து விடுதல், இரட்டையர் பிறத்தலுக்கு காரணமாகின்றது. பரிணாமத் தொடரில் ஓர் இயல்பு [பழக்கம்], தன்னிச்சையாய் ஊக்கமடைந்து விடுதல், இயல்பூக்கம்.

எந்த ஒரு பரிணாம, இயல்பூக்க மாற்றமும் செயல் விளைவை எதிர் கொண்டே தான் ஆக வேண்டும். எடுத்துக்காட்டாக, உணவு ஈட்ட வெளவால், இரவில் விழித்திருக்கலாம், எனினும் பகலில் செயல் விளைவாய் மூளை செல்களில் ஆற்றல் குறைதல், அதை உறக்கம் எனும் நிலைக்கு உட்படுத்தவே செய்யும். செயல் - விளைவின்றி எந்த ஒரு பரிணாம, இயல்பூக்க நிகழ்வும் இப்பிரபஞ்சத்தில் கிடையாது.

இத்தகைய இயற்கையின் அறிவைக் காணும் போது, ஒருவேளை உணவு ஈட்டும் இயற்கைத் தேவை சார்ந்து, மனிதர்க்கு இரவில் தொழில் புரியும் நிலை வருமாயின், அதையும் இயற்கை பரிணாமம், இயல்பூக்கம், செயல் விளைவு என்ற மூன்றையும் கொண்டு அணுகவே செய்யும், எனும் எண்ணம் நமது மனதில் உறுதியாய் பூக்கின்றது.

பரிணாமம் - இயல்பூக்கம் - செயல் விளைவு இதுவே இயற்கையின் செயல்முறை.

பிரம்ம ஞானப் பட்டம் வந்த காரணம் யாது?

ஒரு இரயில் பெட்டியில் ஏறுகின்றீர்கள், முதல் வகுப்புப் பயணியிடம் கேட்கின்றீர்கள். எங்க போறீங்க? என்று. அவர் போகுமிடத்தின் பெயர் சொல்லுகின்றார். எங்கே இருந்து போறீங்க? அவர் கிளம்பிய இடத்தைச் சொல்கின்றார். கடைசி வகுப்புப் பயணியிடம் போகின்றீர்கள். அவரிடமும் அதே கேள்வி, அவர் விடை சொல்ல வரும் போது, அவரிடம் போய், கடைசி வகுப்புல தான போற, உனக்கு கிளம்புமிடம், போகுமிடம் தெரிஞ்சா என்ன? தெரியாட்டி என்ன? என்று சொன்னால்? நமது சமுதாயத்தின் பெரும் பகுதி 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இப்படித்தான் இருந்தது. ஒரு பிராமணரிடம் போய், தங்கள் பிறவி எங்கு செல்கின்றது? என்று கேட்டால், அவர் சொல்வார் பிரம்மம் நோக்கி என்று. உங்கள் பிறவி எங்கே துவங்கியது என்று கேட்டால் மிகச் சரியாய்ச் சொல்வார். பிரம்மத்திலிருந்து என்று. கடைசி வகுப்புப் பயணியாம், ஒரு 19ஆம் நூற்றாண்டு சூத்திரரை எடுத்துக் கொள்ளுங்கள். அவரிடம் போய்க் கேட்டுப் பாருங்கள், உங்கள் பிறவி துவங்கியது எங்கு என்று? அவர் சொல்வார், அது தெரிஞ்சி என்ன செய்யப் போறேன் என்று. எங்கு போகின்றது உங்கள் பிறவி என்று கேட்டால், அது மட்டும் தெரிஞ்சி என்ன பண்ணப் போறேன் என்று தான் விடை வரும். பிரம்ம ஞானம் என்பது புனிதம் எனும் பெயரில் பஜனை பாடி, மந்திரம் ஓதி, மூச்சை விட்டு விட்டு வயமாய் இழுக்கும் ஒரு குழுவினருக்கு மட்டுமே சொந்தமாய்ப் போனது, சமுதாயத்தின் இழிவு.

Revolution என்று சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். வேதாத்திரியம் எனும் ஓர் Revolution அதை அனைவருக்கும் எளிமைப்படுத்தி பொதுவுடமையாக்கல் முறைக்கு உட்படுத்தியது. பொதுவுடமை ஆக்கி விட்டோம், எப்படி அச்செய்தியை வெளிக் கொணர்வது? மஹான் கண்டு பிடித்தார் ஒரு எளிய முறையை. யாரை எல்லாம், தாழ்ந்தோரில்லை என்று அழைக்க விரும்பினோமோ அவர்களை எல்லாம் காந்தி 'ஹரி சனம்' அழைத்தது போன்று, எவர்க்கெல்லாம் பிரம்ம ஞானம் மறுக்கப் பட்டிருந்ததோ, மறைக்கப் பட்டிருந்ததோ, அவர்களுக்கு பிரம்மத்தின் சுவை தந்து, அவர்களை 'பிரம்ம ஞானி' என்று வழங்கினார். பிரம்ம ஞானம் பொதுவுடமை என்று உணர்த்தவே நாம் எல்லாம் பிரம்ம ஞானி என்று அழைக்கப் படலானோம்.

ஒரு மத குரு கேட்டார், எல்லாரையும் பிரம்ம ஞானி ஆக்குகின்றீர்களாமே என்று? மஹான் எளிமையாய்ச் சொன்னார். அது ஒண்ணுமில்லீங்க. எங்க இருந்து வந்தாங்க, எங்க போறாங்க என்று சொல்லிக் கொடுக்குறேன் அவ்வளவு தான் என்று.

மேலும், மஹான் system-rules என்பவைகளில் மிக அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே தான் இந்த பட்டச் சான்றிதழ் வழங்கும் வழக்கத்தையும் கொணர்ந்தார். மஹான் வழங்கும் பிரம்ம ஞானப் பயிற்சி முடிவில் தரப்படுவது பிரம்ம ஞானச் சான்றிதழ் அன்று - அது பிரம்ம ஞான பயிற்சிச் சான்றிதழ். அதாவது பயிற்சி பெற்றதற்கான சான்று (evidence) + இதழ். அவ்வளவே.

பிரம்ம ஞானப் பட்டம் வந்த விதம் சமுதாயப் புரட்சிக்காகவே! ஆன்மீகத்தை சமுதாயத்தின் ஒவ்வோர் அங்கமும் ஏற்கவே.

[பின் குறிப்பு: இதையும் நாம் நினைவில் கொள்வது நன்று. பிரம்ம ஞானி என்பது நிலையா? பட்டமா? விடை எளியது தான். நிலை என்றுணர்ந்தோர் பட்டத்தை கண்டு கொள்வதில்லை. பட்டம் தரும் தன் முனைப்பில் சிக்கியோர் நிலையை அடைவதில்லை.]

மூலம் : https://sites.google.com/site/vethathirianspace/literaturecollection-போர்தேபூக்

நன்றி அருண்.

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment

Ads by Adbrite

Your Ad Here